Friday, August 27, 2010

ரமழான் மாதம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை

ரமழான் மாதம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நமது மக்களின் அதிருப்தியை வாரிக்கொண்டது. ஒலிபரப்பு விற்பன்னர்கள் எனத் தம்மைக் கருதும் சிலர் அதனை எவ்வாறு ஏலத்தில் விட்டுள்ளார்கள் என்பதை பெரிதாக ஒன்றும் விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை. நாள் பூராகவும் பயான், சிறப்புப்பேச்சு, விசேட உரை, நற்சிந்தனை, விசேட பயான்..அப்பாடா சொற்பொழிவு மயம். நிகழ்ச்சிகளின் பன்முகத்தன்மைக்கு இடமே இல்லை. குர்ஆனும் ஹதீசும் வர்த்தகமயமாகிவரும் இந்த நிலையில் சில ஒலிபரப்பு யாசகர்களின்கையில் மாட்டித் தவிக்கும் முஸ்லிம் சேவையை காப்பாற்றி உயிர்துடிப்புள்ளதாக மாற்றவேண்டியது சகலரதும் கடமையாகும். அரசியல் காக்காக்கள் சிலரும் இந்த சீரழிவுக்குப் பல்வேறு விதங்களின் உடந்தை என்பதை வெகு விரைவில் மக்கள் புரிந்துகொள்ளவார்கள். அன்பின் நண்பர்களே சமகால முஸ்லிம் ஒலிபரப்பு தொடர்பாக உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை நம்மோடு பகர்ந்து கொள்ளுங்கள். அதில் எத்தகைய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். அல்லது புதிய பணிப்பாளர் அல்-ஹாபிழ் எஸ். முஹம்மது ஹனீபாவுக்கு உங்கள் காத்திரமான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்துங்கள்.

Monday, October 12, 2009

கூச்சலோ கூச்சல் -----

கூச்சலோ கூச்சல் -----
இன்று காலை முஸ்லிம் சேவை ஒலிபரப்பில் ஏ.வீ.எம் கூள்பார் நிறுவனத்தின் ஆதரவில் இடம்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சியைக் கேட்டேன். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கு நிதியீட்டிக் கொடுப்பதில் முஸ்லிம் வர்த்தகர்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து வியந்து போக முடிகின்றது. அடுத்ததாக, குறிப்பிட்ட நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டால், அது கலையகமொன்றில் ஒலிபப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியோ, அல்லது வானொலியில் ஒலிபரப்பப்பட வேண்டும் என்ற நோக்குடன் வெளிக்களத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி அல்ல.

வானொலியில் ஒரு நிகழ்ச்சியைக் கேட்கும் போது செவிமடுப்பவருக்கு எந்தத் தொந்தரவையும் நிகழச்சி ஏற்படுத்தக் கூடாது. கேட்பதற்கு இனிமையாக, தெளிவாக, மனதைக் கவரக்கூடிய விதத்தில் அமைதல் கட்டாயமாகும். இப்படிச் சொல்லும் போது மௌலவி ஹசன் பரீத் அவர்களின் பயன்தான் ஞாபகம் வருகின்றது.கேட்பதற்கு என்னேதெளிவு!!! ஆக, வானொலி நிகழ்ச்சி கேட்பவருக்கு ஒரு சுகமான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். இன்று இடம்பெற்ற குறிப்பிட்ட நிகழ்ச்சி என்னவென்றே புரியவில்லை. திறந்தவெளியில் நூறு இருநூறு பேருக்காக ஆற்றப்பட்ட திறந்தவெனி உரையைப் போன்று கூச்சலாக இருந்தது.

ஒலிபரப்புப் கூட்டுத்தானபத்தைப் பொருத்தவரை கலையகத்தில் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்வதற்கான பல வாய்ப்புகள் இருக்கின்றன. உலமாக்களை கலையகத்திற்கு வரவழைத்து நிகழ்ச்சிகளைச் செய்வதன் மூலம் பல நன்மைகள் இருக்கின்றன. உலமாக்களுக்கு கலையகப் பயிற்சியைப் பெற்றுக்கொடுத்தல், நிகழ்ச்சிகளின் தெளிவிளைப் பேணிக்கொள்தல், நிகழ்ச்சித் தயாரிப்புக்கு ஏற்றவிதத்தில் நிகழ்ச்சி உள்ளீடுகளைத் திட்டமிடுதல், வெளிக்களத்திற்குச் செல்வதால் ஏற்படும் அவசியமற்ற செலவினத்தைக் குறைத்தல் இத்தகைய நன்மைகளில் சிலவாகும். பொது மேடைகளில், பிரசங்கமேடைகளில் ஆற்றப்படும் உரைகளில் வெளிக்களப் பின்னணி ஒலியும், சகிக்க முடியாத இரைச்சலும் , ஆரவாரச் சத்தமும் செவிமடுப்பவர்களின் உள்ளங்களில் சகிக்க முடியாமயையும் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. இன்றைய நிகழ்ச்சி இத்தகைய எரிச்சலையே ஏற்படுத்தியது.

இது குறிப்பிட்ட மௌலவியின் தவறன்று. இதனை எடுத்து வானொலி ஒலிபரப்புக்காகச் சேர்த்துக் கொண்ட தயாரப்பாளர் எந்த நோக்கத்தில் இதனை ஒலிபரப்புக்காகச் சேர்த்துக் கொண்டார் என்றே தெரியவில்லை. முஸ்லிம் நிகழச்சி ஒலிபரப்பு நேர்த்தியினைப் பொருற்படுத்தாது செயற்படுகின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதுபோன்ற கூச்சல் கும்பலான பல நிகழ்ச்சிக்கள் முஸ்லிம் சேவையில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

வரலாற்றுத் தொடர்
இன்று இடம்பெற்ற வரலாற்றுத் தொடர்நிகழ்ச்சி, சிறந்ததொரு வரலாற்றுச் சம்பவத்தை எடுத்துக் காட்டியது. இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களை மக்கள் தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகும். ஈமானியப் பலத்தை வளப்படுத்தும் ஆற்றல் இந்த வரலாற்றுச் சம்பவங்களுக்கு உண்டு. ஆனால், இந்த நிகழ்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் மிகவும் குறுகியது. இது, விளம்பரதாரரின் தேவையினை உச்ச அளவில் பூர்த்திசெய்கின்றது. ஆனால், கேட்பவருக்கு தொடர்ந்து கேட்கும் ஆர்வத்தை இந்நிகழ்ச்சி நிச்சயமாகத் தூண்டாது. இரண்டு மூன்று நிமிடங்களுக்காக அமர்ந்து தொடர் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருப்பதென்றால் வீட்டில் இருப்பவர்கள் கடிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு முஸ்லிம் சேவையினை மாத்திரம் கேட்டுக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும். மக்கள் எத்தனையோ வேலைகளுக்கு மத்தியில், சிலநேரம் வேலைகளை செய்து கொண்டிருக்கும் நிலையில், அல்லது, திடீரென்று ஓய்வு கிடைக்கின்றபோதுதான் வானொலியினைக் கேட்கின்றார்கள். தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்டுவரும் வயோதிபர்கள், இல்லத்தரசிகள் கூட சிலநேரம் நிகழ்ச்சிளை இவ்வாறு சிறுசிறு பகுதிகளாக ஒலிபரப்பும் போது அதனை தொடர்ந்து கேட்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தொடர் நிகழ்ச்சியொன்று குறைந்தபட்சம் 15 நிமிடங்ளையாவது கொண்டிருக்க வேண்டும். இது அங்கிருக்கின்ற மூதாதையர்களுக்குத் தெரியாதவிடயமல்ல.

ஒரு நிகழ்ச்சியைத் தவறவிட்டவர் அடுத்த நிழக்ச்சியில் என்ன ஒலிக்கின்றதென்று அறிவதில் பல சிரமங்களை எதிர்நோக்கலாம். அத்தோடு முஸ்லிம் சேவையின் காலை ஒலிபரப்பில் இடம்பெறும் பல உதிரி நிகழ்ச்சிகள் உரிய இடத்தில் முடிவடைவதும் இல்லை. சரியான அறிமுகத்துடன் தொடங்குவதும் இல்லை. திடிரென்று தொடரும் திடிரென்று முடிவடையும். தொடர் நிகழ்ச்சிகளில் அதில் ஒரு தொர்ச்சியை தயாரிப்பாளர்கள் பேணிக்கொள்வது கட்டாயம். இன்று நிகழ்ச்சியைக் கேட்கும் எல்லோரும் நாளையும் நிகழ்ச்சிகளைக் கேட்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இன்றைய வரலாற்றுத் தொடர் நிகழ்ச்சியில் மற்றொருமுறை நபி (ஸல்) அவர்கள்….என்றதும் அறிவிப்பாளர் இதன் தொர்ச்சியை நாளை கேட்கலாம் என்றார். இது நேயர்களை மையமாகக் கொண்டு இடம்பெறும் ஒலிபரப்பிற்குரிய பண்பு அல்ல. விளம்பரதாரர்களின் திருப்திக்காக நிகழ்ச்சிகளை தானம் செய்வதா மக்களின் தேவையை உணர்ந்து விளம்பர நிகழ்ச்சிகளை வளப்படுத்துவதா என்பதை சகோதரர் ........ கருத்திற்கொள்வது முஸ்லிம் சேவை நேயர்களுக்குச் செய்யும் பேருபகாரமாகும்.

Thursday, October 8, 2009

முஸ்லிம் சேவை


ஒரு காலத்தில் முஸ்லிம் சேவை ஒலிபரப்பின் தரம் மிகவும் மேலோங்கியிருந்தது. சாதாரண வாழ்வில் சகல அம்சங்களையும் முஸ்லிம் சேவை ஒலிபரப்பு உள்ளடக்கியிருந்தது.வெறும் சமயப் பிரச்சார ஊடகமாக மாத்திரம் அது செயற்படவில்லை. இலக்கியம், சமய உபதேசம், கலை கலாசாரம், சர்வதேச விவகாரம், அறிவியல் என பல்வேறு விதமான உள்ளடங்க்கங்களை முஸ்லிம் சேவை கொண்டிருந்தது. பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியறிவில் உயர்ந்தவர்கள், சாதாரண கிராமிய மக்கள், வர்த்தகர்கள் என்று சகலதரப்பினரையும் முஸ்லிம் சேவை திருப்திப்படுத்தியது. ஆண்பெண் பாகுபாடும் அன்று இருக்கவில்லை.

ஒலிபரப்பின் உத்திகள், தயாரிப்பின் செம்மை என்பன மக்களை மிகவும் கவரும் விதத்தில் அமைந்திருந்தன. இன்று முஸ்லிம் ஒலிபரப்பு முழு சமுகத்தையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. மக்களை பகடைகாளக் கணிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றுத் துரோகத்தை சீரணித்துக்கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக குப்பை கூழங்களை முஸ்லிம் மக்களின் காதுகளில் கொட்டத்தொடங்குகின்றது முஸ்லிம் சேவை.